கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. விஜயிடம் 5 மணி நேரம் விசாரணை..
N.F.Rifka
admin

கடந்த 2025 செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் நிகழ்ந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில், திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கில் 107 நாட்களுக்குப் பின் விஜயை, விசாரணை வளையத்திற்குள் சிபிஐ கொண்டு வந்துள்ளது. அடுத்த கட்ட நகர்வு என்ன?
கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கை, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. சம்பவம் நடைபெற்ற இடம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து, கடந்த டிசம்பர் 29 அம் தேதி தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் மற்றும் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர்.
அவர்களிடம் 8 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. இதேபோன்று, கரூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அண்மையில் சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விஜய் பயன்படுத்திய பரப்புரை வாகனத்தையும் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர், அந்த பேருந்தின் ஓட்டுநரிடமும் விசாரணை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக தவெக தலைவர் விஜயை நேரில் ஆஜராக கூறி, கடந்த 6 ஆம் தேதி சிபிஐ சம்மன் அனுப்பியது. இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் டெல்லிக்கு புறப்பட்டார். அவருடன், தவெக நிர்வாகி நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, விஷ்ணு ரெட்டி உட்பட 6 பேர் சென்றனர். டெல்லி சென்றடைந்ததும் காலை 11.35 மணிக்கு சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராகினார்.
அவரிடம், 100 கேள்விகளை முன்வைத்து விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டதாக கூறப்பட்டது. அதன்படி, 41 பேர் உயிரிழப்புக்கு காரணமான கூட்ட நெரிசல் எப்படி நடந்தது?. பரப்புரை நடத்திய குறுகிய இடத்தை எத்தனை பேர் கூடுவார்கள் என்பது முன்பே தெரியுமா?. பரப்புரை நடைபெற்ற வேலுச்சாமிபுரத்திற்கு தாமதமாக வந்ததற்கான காரணம் என்ன? என்பன போன்ற கேள்விகளையும் கேட்டுள்ளனர்.
அத்துடன், குழந்தை காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டபோது அங்கிருந்த கள சூழல் என்ன?. கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியது தெரியுமா? என்றும் விஜயிடம் கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அசம்பாவிதம் நிகழ்ந்ததும் பரப்புரை நடத்திய பகுதியில் இருந்து வெளியேறிது ஏன்? எனவும் அடுக்கடுக்கான கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிக்கணக்கில் நடத்தப்பட்ட விசாரணையில் விஜயிடம் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் அவர் அளித்த பதில்கள் எழுத்துபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கில் விஜய் மீது, எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படாத போதும், பி.என்.எஸ்.எஸ்.பிரிவு 179-ன் படி சாட்சியாக விசாரிக்க சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து 107 நாட்களுக்குப் பின் விஜயிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.
விசாரணையை தொடர்ந்து தேவைப்படும்பட்சத்தில் மீண்டும் சம்மன் அனுப்பி விசாரிக்கவும் சிபிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, மாலை 6.30 மணியளவில் சிபிஐ அலுவலகத்தில் இருந்து விஜய் வெளியே வந்தார். இன்று (12ஆம் தேதி) விஜய்யிடம் விசாரணை நிறைவடைந்த நிலையில், நாளையும் விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ அதிகாரிகள் சம்மன் வழங்கியுள்ளனர்.அப்போது, பொங்கல் பண்டிகை தொடர்பான கொண்டாட்டங்களுக்கு தேதி கொடுத்து, நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால் வேறு ஒரு தேதியில் ஆஜராவதற்கு அவகாசம் கோரப்பட்டது. அதனை ஏற்ற சிபிஐ, விசாரணை தேதியை தள்ளிவைப்பதாக சொல்லியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, கரூர் சம்பவத்தின்போது சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
